search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவல் சண்டை"

    • இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.

    நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.

    இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன.
    • ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக சேவல் சண்டை களை கட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்குபெறும் சண்டைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன. இந்த இடங்களில் துரித உணவு மையங்கள் டீக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது.

    சில அரங்கங்களில் மதுபானம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களும் விற்கப்பட்டன.

    சேவல்களுக்கு ஆற்றல் மிக்க உணவுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் சேவல்களுக்கு வயாகரா மாத்திரை வழங்கப்பட்டது.


    காலில் கட்டப்பட்ட கத்தியுடன் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதின. ஒவ்வொரு சேவல்கள் மீதும் லட்ச கணக்கில் பணம் பந்தயமாககட்டப்பட்டது.

    இதற்காக சூதாட்ட மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன . பணம் அதிகமாக கட்டப்பட்டதால் சேவல் சண்டை நடந்த பகுதிகளில் நேற்று ஏ.டி.எம்.மில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் காலியாக கிடந்தன.

    இதனை தவிர்க்க சேவல் சண்டை நடைபெற்ற இடங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தனர் .அதன் மூலமாக பலர் பந்தயம் கட்டினர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பந்தயமாக கட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    சங்கராந்தி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.

    இது குறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

    நான் சேவல் சண்டையில் முதலில் ஒரு லட்சத்தை இழந்தேன். ஆனால் அதற்கு பிறகு பணம் கட்டி ரூ.3 லட்சம் வென்றேன் என தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் சேவல் சண்டைகளில் பணம் வென்றதாக தெரிவித்துள்ளனர்.

    • இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
    • ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திராவில் நேற்று சங்கராந்தி பண்டிகை கோலபாலமாக கொண்டாடப்பட்டது. சங்கராந்தி பண்டிகையையொட்டி நடத்தப்படும் சேவல் சண்டை தொடங்கியது.

    கிருஷ்ணா, என்.டி.ஆர், மேற்கு கோதாவரி கிழக்கு, கோதாவரி, கோணசீமா , ஏலூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னவரம், சிஞ்சிநாடா, பூபால பள்ளி, திருவூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    டிஜிட்டல் திரைகள் பேனர்கள் கடைகள் ஓட்டல்கள் துரித உணவகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.

    சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் வரவேற்பு அதிக அளவில் இருந்ததால் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.


    பல்வேறு கிராமங்களில் இருந்து ரூ.2 லட்சம் முதல் அதற்கு மேற்பட்ட விலையுயர்ந்த சேவல்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் திரளாக வந்திருந்தனர்.

    சேவல்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பணத்தை பந்தயமாக கட்டினார். இதனால் ஒரே நாளில் பல கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.

    நேற்று ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.

    3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பல கோடி வரை பந்தயம் நடைபெறும் என சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை மிகவும் பிரபலம்
    • சேவல் சண்டை சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் கை மாறுகிறது

    2024ல் நாடு முழுவதும் ஜனவரி 14, 15 மற்றும் 16 தேதிகளில் "மகா சங்கராந்தி" எனப்படும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என விமரிசையாக கொண்டாடப்படும் இக்காலகட்டத்தில் காளைகளை இளைஞர்கள் பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும்.

    இதே போல் ஆந்திர பிரதேச குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களின் பல பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம்.

    இதற்கென பல கிராமங்களில் பலர் தங்கள் சேவல்களை சண்டை சேவல்களாக பழக்கப்படுத்தி வைக்கின்றனர். இப்போட்டிகளில் சண்டையிடும் சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக போட்டியிடும் போது ஒரு சேவல் இறப்பதும், உயிருடன் இருக்கும் சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.

    வெற்றி பெறும் சேவல் மீது பணம் கட்டும் சூதாட்டமும் நடைபெறும். கோடிக்கணக்கான பணம் இந்த சூதாட்டத்தில் கைமாறுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் உள்ள சேவல்கள் "ரனிகெட்" (Ranikhet) எனும் நோயால் பாதிக்கப்பட்டு வருவது சேவல் வளர்ப்பவர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.

    போட்டிக்கு சில நாட்களே உள்ளதால், நோயுற்ற சேவல்களுக்கு சக்தி ஊட்டும் விதமாக ஆண்மை குறைவு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் "வயாகரா" மாத்திரைகளை தங்கள் சேவல்களுக்கு கொடுக்க வளர்ப்பாளர்கள் துவங்கியுள்ளனர்.

    மேலும் சிலர், இத்துடன் பல வைட்டமின் மாத்திரைகளையும், வேறு சிலர் ஆயுர்வேத ஆண்மை குறைவு மருந்தான "சிலாஜித்" போன்றவற்றையும் சேவல்களுக்கு வழங்குகின்றனர்.

    ஆனால், இப்பழக்கம் சில காலம் சேவல்களுக்கு உற்சாகத்தை அளித்து, நீண்ட நாட்களுக்கு பிறகு சேவல்களை முடக்கி விடும் என கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    அவர்கள் அறிவுரையை புறக்கணிக்கும் சேவல் வளர்ப்பாளர்கள், "பல வருடங்களாக சண்டை சேவல்களை வளர்க்க பெருமளவு செலவு செய்துள்ளோம். ஆனால், தற்போது அவை நோயினால் சக்தி குறைந்து காணப்படுகின்றன. எனவே அவற்றிற்கு தெம்பூட்ட இந்த மாற்று வழியை கையாளுகிறோம். சண்டைக்காகத்தான் இம்மருந்துகளை கொடுக்கிறோம். இதுவரை சேவல்களை ஆய்வு செய்ததில் பரிசோதனை முடிவுகள் ஊக்கம் அளிப்பதாகவே உள்ளன" என சேவல்களை வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.

    • பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரவு நேர சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    பணம் வைத்து சூதாட்டம் மட்டுமின்றி சேவல்களை களத்தில் விட்டும் சூதாட்டம் நடைபெறுவதாகவும், அதன்படி வேடசந்தூர் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கோடாங்கிபட்டி பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெற்றது தெரிய வரவே அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட விஜயகுமார், செல்வக்குமார், கனகராஜ், பிரபாகரன், ரஞ்சித்குமார், ஆனந்தன், சிவசெல்வன், தளபதி, முத்துச்சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பயணத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சிலர் தப்பி ஓடியதால் அவர்களையும் தேடி வருகின்றனர். கிராமப்புறங்களில் தொடர்ந்து சூதாட்டம் நடத்தப்பட்டு வருவதால் பலர் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை இழந்து செல்கின்றனர். மேலும் சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

    எனவே போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி இதுபோன்ற சூதாட்டங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் வெட்டுகாலனி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப்பாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 23), கம்மார்பாளையத்தை சேர்ந்த கலைமணி (30), மங்காவரத்தை சேர்ந்த அஜீத் (26) மற்றும் வெங்கடாதிரிபாளையத்தைச்சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.மேலும் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    • திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தங்கனூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
    • சேவல் சண்டை போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தங்கனூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது

    இந்த சேவல் சண்டை போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.

    சேவல் சண்டை போட்டிகளில் சேவல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சூழல், சூதாட்டப் புகார் உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சேவல் சண்டை போட்டிகளை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர்.

    இந்த சேவல் சண்டை போட்டி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும்.

    இதில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் கொண்டு கால்நடை மருத்துவர்களின் பரிசோதனை, போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் புதுச்சேரி கன்னியாகுமாரி பாம்பே நெல்லூர் விஜயவாடா பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.

    இதில் நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன.

    மூன்று நாள் போட்டிகளில் தொடர் வெற்றி பெறும் சேவலுக்கு முதல் பரிசு 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் இரண்டாம் பரிசு ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.

    இதற்காக திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தர் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சேவல் சண்டை போட்டியை பார்க்க ஏராளமானோர் புதூர் கிராமத்தில் குவிந்தனர்.
    • காணும் பொங்கல் விழா அப்பகுதியில் களை கட்டியது.

    திருத்தணி:

    பொங்கல் பண்டிைக என்றாலே ஜல்லிக்கட்டு நினைவுக்கு வரும். இதற்கு அடுத்த இடத்தில் சேவல் சண்டை உள்ளது. பெரும்பாலான இடங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நடத்தப்படுவதில்லை.

    இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை புதூர் கிராமத்தில் உரிய அனுமதி பெற்று இன்று சேவல் சண்டை நடத்தப்பட்டது.

    இதனால் புதூர் கிராமமே களை கட்டியது. இதில் பங்கேற்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சண்டை சேவல்கள் வந்தன. சொகுசு கார்களில் பிரத்யேக கூண்டில் இந்த சேவல்கள் வெளி மாநிலங்களில் இருந்து பத்திரமாக கொண்டு வரப்பட்டது. இந்த சேவ்லகள் சுமார் 1½ அடி உயரம் வரை இருந்தது. கம்பீரமாக காணப்பட்ட சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

    சேவல் சண்டைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் கிளிக்கொண்டை சேவல், வெள்ளைக் கொண்டை வெள்ளை சேவல், முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன. சுமார் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டி களத்தில் இறக்கப்பட்டது. 3 சுற்றுகள் நடத்தப்பட்டு சண்டையில் வெற்றி பெற்ற சேவல் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற சேவல்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

    இந்த சேவல் சண்டையில் தங்களது சேவல்கள் பங்கேற்பதை கவுரவமாக கருதுவதாக இதில் பங்கேற்றவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சேவல் சண்டை போட்டியை பார்க்க ஏராளமானோர் புதூர் கிராமத்தில் குவிந்தனர். இதனால் காணும் பொங்கல் விழா அப்பகுதியில் களை கட்டியது.

    • சேவல் ஒன்றின் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரிய பிரகாஷின் கழுத்தில் பலமாக வெட்டியது.
    • சூரிய பிரகாஷின் தொண்டையில் உள்ள நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

    சேவல்களின் காலில் கட்டப்பட்ட கத்தியுடன் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்வதை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சேவல் சண்டையை வேடிக்கை பார்ப்பார்கள்.

    சண்டையில் பங்கேற்கும் சேவல்கள் மீது லட்சக்கணக்கில் பணம் கட்டுவார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளாக நடந்த சேவல் சண்டையின்போது பலர் உயிரிழந்ததால் ஆந்திர மாநில அரசு சேவல் சண்டைக்கு தடை விதித்து இருந்தது.

    ஆனாலும் தடையை மீறி சேவல் சண்டை நேற்று நடத்தப்பட்டது.

    காக்கிநாடா மாவட்டம், கிர்லாம்புடி பகுதியில் நடந்த சேவல் சண்டையை அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 43) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது சேவல்கள் மேலே பறந்தபடி ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டன.

    மேலே பறந்து வந்த சேவல் ஒன்றின் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரிய பிரகாஷின் கழுத்தில் பலமாக வெட்டியது.

    இதில் சூரிய பிரகாஷின் தொண்டையில் உள்ள நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது. அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சூர்யா பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டம், நல்ல கர்லா மண்டலம், அனந்த பள்ளியில் நடந்த சேவல் சண்டையை பத்மா ராவ் (வயது 22) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது பறந்து வந்த சேவல் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி பத்மாராவின் முழங்காலுக்கு கீழே வெட்டியது.

    இதில் காலில் இருந்த நரம்பு துண்டிக்கப்பட்டு அவர் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேவல் சண்டை போட்டியின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.
    • நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி இரண்டு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டாது என்று உறுதி அளித்தால் இந்த சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சேவல்களை துன்புறுத்தக் கூடாது, போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது, அவற்றின் கால்களில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த சேவல் சண்டை போட்டியின் போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர்.

    இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து இருக்கின்றனர்.

    • தமிழக கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது.
    • கரூர் மாவட்டத்தில் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    கரூர்:

    தமிழக கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பு இருந்து தயார்படுத்துகிறார்களோ அதேபோல சண்டை சேவல் களையும் தயார்படுத்துகின்றனர்.

    பொதுவாகவே சேவல்களுக்க சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கபபட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றை சண்டையிட செயல்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை.

    சேவல் சண்டையானது சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. சேவல் கட்டுக்கு சேவல்களை கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, உள்ளிட்ட ஊட்டச்சத்து தானியங்களை உணவாக கொடுத்து வளர்ப்பார்கள்.

    கரூர் மாவட்டத்தில் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் இச்சேவல் சண்டையில் அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்களை கொண்டு வந்து இந்த கிராமத்தில் சேவல் சண்டையில் பங்கேற்பார்கள். இவற்றை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.

    போட்டியில் தோற்றுப் போகும் சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளருக்கு கொடுத்து விடுவர். இந்த சேவல் கோச்சை என்று அழைக்கப்படும் கறி விருந்திற்கு பயன்படுத்தப்படும். இந்த சேவல்கள் விற்பனைக்கும் வரும். அதனை ரூ.15 ஆயிரம் வரை விலை கொடுத்தும் வாங்குவார்கள்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இக்கிராமத்தில் சேவல் சண்டை நடத்துவதற்காக விழா கமிட்டியினர், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர், வாகன நிறுத்துமிடம், கடைகள் உள்ளிட்ட வசதிகள் தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நீதிமன்ற தடையாணை உள்ளதால், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூலாம்வலசு கிராமத்திற்கு வரக்கூடிய வெளியூர் வாகனங்கள் மற்றும் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் தங்கியுள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் கண்டறிந்து அவர்களை வெறியேறும்படி கூறி வருகின்றனர்.

    மேலும் வெளியூர்களிலிருந்து போட்டியில் பங்கேற்பதற்காக சேவலுடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனை பார்த்த விழா கமிட்டியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் விரைந்து வந்து, விழா கமிட்டியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை பிரபலமான ஒரு விளையாட்டாக நடத்தி வருகின்றனர். இதற்காக வீரியமிக்க சேவல் குஞ்சுகளை வாங்கி வந்து பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட தரமான உணவு அளித்து சண்டை பயிற்சி அளிக்கின்றனர். சுமார் ஐந்து அடி உயரம் வரை வளர்க்கப்படும் இந்த சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு மற்றொரு சேவலுடன் மோத விடுகின்றனர்.

    சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷத்துடன் உயரே பறந்து சண்டையிடும் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். சேவல் சண்டை ஆர்வம் உள்ளவர்கள் சண்டையிடும் சேவல்கள் மீது ரூ.1000 முதல் ஒரு லட்சம் வரை பந்தயம் கட்டுவது வழக்கம். பந்தயம் கட்டியவர்களின் சேவல் வெற்றி பெற்றால் 3 மடங்காக பணம் திருப்பி தரப்படும்.

    இந்த நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை புத்திசாலித்தனமாக ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சேவல் சண்டை அமைப்பாளர்கள் வட இந்திய சந்தையை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை. அமைப்பாளர்கள் மெசேஜிங், ஆப்ஸ், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் பேமெண்ட் போர்டல்களுக்கு மாறி உள்ளனர்.

    தற்போது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர் சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவிடப்படுகின்றன. சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு ரகசிய குழுக்களை உருவாக்குகிறார்கள். சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது பாஸ்வேர்ட் எண்களை சேவலின் பெயர்களுக்கு எதிராக பதிவிடப்படுகிறது.

    உங்களது பதிவு சரி என வந்த பிறகு அமைப்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்வது மூலம் சேவல் சண்டையில் சூதாட்டம் நடக்கிறது. வெற்றி பெற்ற சேவல்கள் மீது ஆன்லைனில் பந்தயம் கட்டியவர்களுக்கு அமைப்பாளர்களின் கமிஷன் பிடித்துக் கொண்டு பணம் கட்டியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

    சேவல் சண்டைக்கு ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ×